http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 135

இதழ் 135
[ ஜூலை 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Khmer Political and Economic Expansions in Northeast Thailand under Suryavarman I (1010-1050 ACE)
ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம்
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 1
உலகப் பார்வைக்கு உதயம் - 3
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 1
காலத்தின் கவனிப்பும் தொல்காப்பியர் விருதும்
இதழ் எண். 135 > கலையும் ஆய்வும்
ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம்
ச.சுந்தரேசன்

 



வட தமிழ் நாட்டுக் குடைவரை எதிலும் தாய்ப்பாறை லிங்கம் காணக் கிடைப்பதில்லை. அக்குடைவரைகளில் இலிங்கபாணத்தைப் பொருத்துவதற்கென்று கருவறையின் மையத்தில் சிறிய குழி வெட்டப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் இவ்வமைப்பிலிருந்து மாறுபட்டுக் கருவறையில் தாய்ப்பாறை இலிங்கம் அமைந்த குடைவரையை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் மேலச்சேரியில் காணலாம். 



வழிபாடு அரிதாயிருந்த நாட்களில் இக்குடைவரையை மேலச்சேரியில் இருந்த பாலாஜி குருக்கள் உதவியுடன் 15.4.2011 அன்று பார்வையிட்டேன். மறுமுறை 11.1.2013 அன்று இக்குடைவரை ஆய்வு மேற்கொண்ட நமது டாக்டர் அவர்களுடன் உடன் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். தற்சமயம் 17.9.2016 அன்று மீண்டும் எனக்கு இக்குடைவரையைப் பார்வையிடும் சந்தர்ப்பம் வாய்த்தது. 



செஞ்சியிலிருந்து மேல்மலையனூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கவரத்தையடுத்து ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் மேலச்சேரியை அடையலாம். இவ்வூரின் வட கிழக்கில் செல்லும் பாதையில் (?) சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றுப் பின்னர் மேற்கே பிரியும் மண் பாதையில் சிறிது தூரம் சென்றால் குடைவரை அமைவிடத்தை அடையலாம். அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காங்க்ரீட் அணுகுசாலை வளாகத்தினை எளிதாய் அடைய உதவுகிறது.



 





 



ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம் என்றழைக்கப்படும் இக்குடைவரை மண்டபக் குடைவரை வகையினைச் சேர்ந்ததாகும். இக்குடைவரை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குடைவரையின் வடபுறத்தில் கால வெள்ளத்தால் பாழடைந்த மண்டபம் ஒன்று கருங்கற் சிதறல்களுடன் காணப்படுகிறது. 



 





 



பார்வையாளர்களை வரவேற்கும் முகமாக குடைவரையின் தென்புறத்தில் அணுகுசாலையின் இடபுறத்தே இரண்டு சிறிய திருமுன்கள் அமைந்துள்ளன.      



 





 



குடைவரை வளாகம் ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டிருந்தாலும் அதன் சுற்றுப்புறம் அடர்ந்த காட்டுச் செடிகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்டுள்ளது.      



 





 



குடைவரையின் நேர் எதிரே உள்ளூர் மக்களால் சன்னியாசி ஏரி என்றழைக்கப்படும் நீரற்ற வறண்ட ஏரி காணப்படுகிறது. அதன் நடுவே சிதலமடைந்த நிலையிலும் அழகு மிளிரக் காட்சி தரும் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது. 



 





 



குடைவரையின் எதிரில் உள்ள பீடத்தின் மீது இருத்தப்பட்டுள்ள நந்தியின் சிற்பச் செழுமை நம்மை வியக்க வைக்கின்றது. மடக்கிய முன் கால்களுக்கிடையில் சிறு அளவிலான இலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.



 





 



நந்தி அமர்ந்துள்ள பீடத்தின் மேற்கில் கருங்கல் அடுக்கிய மேடையில் நெடிதுயர்ந்த பழமையான விளக்குத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. 



குடைவரையின் முன் சற்று முன்னிழுத்தவாறு காணப்படும் பிற்காலத்தைய செங்கல் கட்டுமானம் எந்த நேரமும் கூரையோடு விழுந்து விடலாம் என்று அச்சம் தருவதாக உள்ளது. கூரையில் செருகப்பட்டிருக்கும் பதினைந்து கொடுங்கைகளும் கூரைப் பிடிப்பிலிருந்து நழுவிய நிலையில் காணப்படுகின்றன. மரத்திலாலான வாயிற் கதவுகளின் நிலையும் அப்படியே!   



 





 



குடைவரையின் உள்ளே செல்லும் முன் செங்கல் கட்டுமானத்தினாலான பின்னாளைய மண்டபம் ஒன்று இடையறுத்து நிற்கிறது. செவ்வக வடிவமான இம்மண்டத்தின் தென் சுவரில் பிள்ளையாரின் பலகைச் சிற்பமொன்று பதிக்கப்பட்டுள்ளது. 



 





 



 





 



 





 



மண்டபத்தின் வட சுவரை ஒட்டியவாறு அமைந்துள்ள மேடையின் மீது இடமிருந்து வலமாக பைரவர், பீடமொன்றின் மீது இரு பாதங்கள், (சமணக் குறியீடாகலாம்) அம்மன் திருமேனி, அதையடுத்து சிம்மம் மற்றும் கிழக்கு முகமாக சூரியன் ஆகிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.



 





 



இம்மண்டபத்தை அடுத்து வரும் குடைவரையின் முகப்பு இரண்டு பேரளவிலான, உறுப்பு வேறுபாடற்ற நான்முக முழுத் தூண்களையும், அத்தூண்களின் இருபுறத்திலும் பக்கத்திற்கொன்றாக உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத் தூண்களையும் கொண்டமைந்துள்ளது.  



 





 



 





 



விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. முகப்பின் வடபுறத்து முழுத்தூணினையும்,  அரைத்தூணினையும் பிற்காலத்துச் செங்கல் சுவர் இணைக்கின்றது. அகழ்வற்ற பாறைச்சரிவின் விடுபட்ட நீட்சி கபோதமாகக் காணக் கிடைக்கின்றது. 



தென்புறத்து முழுத்தூணின் மேற்கு முகத்தில் இக்குடைவரையை எடுப்பித்த சந்திராதித்யரின் பல்லவ கிரந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. 



 





 



சந்திராதித்தர் கல்வெட்டு:

காரிதமித  ந்ருதிநா

சந்த்ராதித்யேன ஸர்வ்வ நாதந்

ஸ்ரீசிகாரி பல்லவேச்வரமிதி

சைவந் தாம  ஸிம்ஹபுரே



“சர்வநாதனான அரசர் சந்திராதித்யர் சிம்மபுரத்தில் ஸ்ரீசிகாரி பல்லவேஸ்வரம் என்னும் கோயிலை எழுப்பினான்” என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.



முகப்புத் தூண்களுக்கும், கருவறைச் சுவருக்கும் இடையில் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் கூரையில் நான்கு புறத்திலும் வாஜனம் ஓடுகிறது. இதன் தென் சுவரில் பின்னாளில் அகழப்பட்ட ஆழமற்றக் கோட்டத்தில்  நின்ற கோலத்தில் உமையன்னை அருள் பாலிக்கின்றார்.  



 





 



 





 



மண்டபத்தின் தென்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சி அளிக்கின்றார்.



 





 



அர்த்தமண்டபப் பின் சுவரில் அமைந்துள்ள கருவறை வாயிலின் சுவர் மிகத் தடிமனாக அமையுமாறு அகழப்பட்டுள்ளது. இக்குடைவரையின் கருவறையின் வெளிப்புறம் வாயிற்காவலர்கள் அமைக்கப்படவில்லை.  கருவறையினை அடைய ஏதுவாக படிக்கட்டு அமைப்பும் காணப்படவில்லை.



கருவறையின் தரையில் தாய்ப்பாறையிலிருந்து எண்கோண வடிவ ஆவுடையாரும், உருளை வடிவ இலிங்க பாணமும் அகழப்பட்டுள்ளன. கருவறையின் கூரை வாஜனமின்றி காணப்படுகிறது.



 





 



 





 



இதன் கோமுகம் கருவறையின் வடபுறத்தில் கீழ் நோக்கிச் சரிவாக இறங்குகிறது.



 





 



கருவறை இலிங்கத்தின் நேரே மேற்கூரைப் பரப்பில் செதுக்கப்பட்டுள்ளத் தாமரை இக்குடைவரையின் தனிச் சிறப்பு எனலாம். 



 





 



ஸ்ரீ சிகாரி பல்லவேசுரம் என்றழைக்கப்படும் இக்குடைவரையின் காலம் பொ.யு ஏழாம் நூற்றாண்டு ஆகும். குடைவரையை உருவாக்கியவர் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட சந்திராதித்யன் என்பவர் ஆவார்.



தற்போது இக்குடைவரைக் கோயிலின் மூலவர், பிருஹன்நாயகி சமேத மத்தளேஸ்வரர் எனப் பெயர் சூட்டப் பெற்று நித்ய பூசைகள் பெற்று வருகின்றார். இக்குடைவரையைப் பார்வையிட ஏதுவாக சிறிதேனும் முகச் சுளிப்பின்றி இன்முகத்துடன் உதவிய திரு. சிவநாத குருக்களது உபசரிப்பு நன்றி பாராட்டுதற்குரியது. 



நன்றி:

மகேந்திரர் குடைவரைகள், 

ஆக்கம்

டாக்டர். ஆர். கலைக்கோவன்

மு. நளினி

********

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.